டாக்டர் K.செந்தில் வேலன் தயாரிப்பில், குணா சுப்பிரமணியம் இயக்கியுள்ள சீசா திரைப்படம் ஜன.3-அன்று தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

திரைத்துறையில் ஆர்வமுள்ள சிலரின் கூட்டு முயற்சியில் சிறிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது இப்படம்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் இளைஞர்கள் என பலரும் ஆன்லைன் ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கி எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பலர் தற்கொலை வரை சென்று தங்களது வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இந்நிலையில் சீசா திரைப்படம் இது போன்ற இளைஞர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு சமூக சிந்தனை கருத்து கொண்ட திரைப்படமாக வெளிவந்துள்ளது.
சமூகத்தில் இன்றைய இளைஞர்கள் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இப்படம். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதுரங்க வேட்டை நட்டி நடராஜன் காவல் துறையின் விசாரணை அதிகாரியாக வந்து படம் முழுக்க ஆக்கிரமித்து நடித்துள்ளார். இதேபோல் படத்தில் ஆதவா பெயரில் நடித்துள்ள கதாநாயகனும் மனஅழுத்தம் மிகுந்தவராக நிலையில் மாறி மாறி வசனம் பேசி சீயான் விக்ரம் நடிப்பை தொட முயற்சித்துள்ளார். இடையில் சிவ பக்தனாக உடல் முழுதும் திருநீறு பூசி ஒரு ருத்ர தாண்டவமே ஆடியுள்ளார்.

அதேபோல் படத்தின் கதாநாயகி மாளவிகாவின் ஒரு வசனம் திருச்சிற்றம்பலம் படத்தின் தனுஸ்-நித்யாமேனன் நட்பு காட்சிகளை நினைத்து எடுக்கப்பட்டதோ என்னவோ.
வீட்டு வேலைக்காரனாக நடித்த ராஜுவின் கொலையிலும் யார் காரணம் என பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இதேபோல் கார்த்திக் வேடத்தில் நடித்துள்ள ஆர்.எஸ்.ஆர்.ரவி, படத்தின் பிற்பாதியில் நல்ல பாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்துள்ளார். படத்தின் மொத்த கதையும் இவரை மையப்படுத்தி தான் இறுதியில் முடிவுக்கு வருகிறது. இவர் உடல் மொழி, குரல் வளம் மேலும் இவரை நல்ல கலைஞனாக உருவாக்கும் என நம்பலாம். சீசா படத்தின் முடிவு ஒரு சமூக பார்வையோடு, நல்ல ஒரு கருத்தை இளைஞர்கள் சமுதாயத்தில் பதிவு செய்துள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்று. படத்தில் ஒரு டூயட் இடம் பெற்றுள்ளது. சிரிப்பு காட்சிகளுக்கு இடமில்லை, ஆபாசம் இல்லை, குடும்பத்துடன் பார்க்கலாம்.