Wednesday, December 25, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தரமற்ற குடிநீர் கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் - நுகர்வோர்...

தரமற்ற குடிநீர் கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் – நுகர்வோர் நீதிபதி வலியுறுத்தல்

மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராகவே வாழ்கிறார். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி துறையும் சேவை துறையும் எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையான முக்கியம் நுகர்வோர் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தின விழாவில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தினார். அப்போது அவர் பேசியதாவது.

நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 முதல் கடந்த மார்ச் 2023 வரை 1107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2023 ஏப்ரல் முதல் தற்போது வரை 21 மாதங்களில் 462 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் கோயம்புத்தூரில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்குகளில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2023 மார்ச் மாதத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது வழக்கு தாக்கல் செய்து ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 மட்டுமே. நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 119 மட்டுமே. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வழக்கும் மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். விரைவில் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படுவதோடு இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த நிதியாண்டில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தமிழகத்தில் அதிக வழக்குகளை தீர்த்து வைத்து இழப்பீடுகளை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. மக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் நுகர்வோர் வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதன் மூலமாகவும் மக்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் மீது நம்பிக்கை அதிகரிக்கும். 100 நுகர்வோர் பாதிக்கப்பட்டால் ஐந்து நுகர்வோர்தான் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தாக்கல் செய்யும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தரமற்ற குடிநீர் கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நுகர்வோர் பாதிப்புகளை தடுக்கவும் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் சிறப்பாக செயல்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மாநில அரசின் ஆணைப்படி மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடைபெறும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் பேசினார்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆணைய உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர். அய்யாவு, நாமக்கல் சிவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.ராஜவேலு உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று பேசினார்கள். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் தேசிய நுகர்வோர் தின விழாவில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!