டிசம்பர் 24 தேசிய நுகர்வோர் தினத்தை தொடர்ந்து நுகர்வோர் வழக்குகள் குறித்து சமரச முகாம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி T.ராமராஜ் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தி குறிப்பு:
பாராளுமன்றம் இயற்றிய புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த 2019 டிசம்பர் 24ஆம் தேதி அன்று குடியரசு தலைவர் கையொப்பம் செய்தார் இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு தேசிய நுகர்வோர் தின அனுசரிப்பு நிகழ்ச்சியானது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையில் உறுப்பினர்கள் ஆர். ரமோலா மற்றும் என். லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை சமரச முகாம் நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் கடந்த நிதியாண்டில் அதிக வழக்குகளில் சமரசம் மூலம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கி உள்ளது. தற்போது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 92 வழக்குகளில், வழக்கு தாக்கல் செய்துள்ளவர்கள், பணம் பெற்றுக் கொண்டு பொருட்களை விற்பனை செய்தவர்கள் மற்றும் சேவைகள் வழங்கியவர்கள் உட்பட 270 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சமரச முகாமில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை முடித்துக் கொள்ள அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சமரச முகாமில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாமக்கல் வழக்கறிஞர்கள் ஆர், அய்யாவு, பி. குமரேசன், சதீஷ்குமார், ராஜ்குமார், முரளி குமார், திருச்செங்கோடு வழக்கறிஞர்கள் பாலசுப்ரமணியம் சந்திரசேகரன் மற்றும் பரமத்தி வழக்கறிஞர் ராமலிங்கம் ஆகியோர் சமரசர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களும் வர்த்தகர்களும் பிரச்சினையை பேசி முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வில் வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
முகாம் நடைபெறும் இடம்: குறைதீர் ஆணையம், மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு பின்புறம், திருச்செங்கோடு சாலை, நாமக்கல்-637 003, தொலைபேசி எண்: 04286-294719.