நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2024ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகரில் இயங்கிவந்த அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தி இடமாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால், நாமக்கல் நகரில் பல ஆண்டு காலமாக சிறப்பாக இயங்கி வந்த அரசு மருத்துவமனை தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அனைத்து அடிப்படை வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதனை நாமக்கல் தாலுகா மருத்துவமனையாக அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவும், நாமக்கல் புறநகர் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது முதல், ஏற்கனவே இயங்கி வந்த பழைய பேருந்து நிலையத்துக்குள் நகர பேருந்துகள் தவிர புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல் நகருக்குள் வந்து செல்லும் பிற பேருந்துகள் எதுவும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வராமல், ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றன. எனவே வணிகர்கள் நலம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நாமக்கல் நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்கவும், மேலும் பழைய பேருந்து நிலையத்தை வேறு எங்கும் இடமாற்றம் செய்யாமல் நிரந்தரமாக அதே இடத்தில் தொடர்ந்து செயல்படும் எனும் உறுதியை வழங்கி, ஆயிரக்கணக்கான வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களை காத்திட வேண்டியும், நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டால் ஒட்டுமொத்த வணிகர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். வணிகர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வரும் நிலையில், அரசு மக்களின் கருத்தினை கேட்டறிந்து அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டியும், பிளாஸ்டிக் பைகளை (கேரி பேக்) சோதனை செய்கிறோம் எனும் பெயரில் பெரும் கூட்டமாக கடைகளுக்குள் நுழையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அதனை கைவிட்டு நியாயமான முறையில் சோதனையிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். மேற்கண்ட கோரிக்கைகளை நமது மாநில தலைமை, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பொதுக்குழு கூட்டத்தில் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் ராயல் பத்மநாபன், நாமக்கல் மாநகராட்சி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் கருணாகரன், பொருளாளர் முரளி, மாநில துணை தலைவர் சுப்பிரமணியம், வெண்ணந்தூர் வட்டாரா அனைத்து வணிகர் சங்க செயலாளர் ரமேஷ், பொருளாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.