நாமக்கல் மாவட்டம் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் (KSRCT) 2019-23 -ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கான 26-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன் பட்டமளிப்பு விழாவில் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர்.ஆர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்து பேசுகையில், ஏ.ஐ.சி.டி.இ மற்றும் தேசிய கல்விக் கொள்கைகள் வகுத்துள்ள கொள்கைகளை கடைபிடிக்க கல்லூரி உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் ராஜூவ்சக்சேனா சிறப்பு விருந்தினராகவும், இந்திய அரசின் நிறுவனமான ஹைதராபாத்தில் அமைந்துள்ள தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆர்.விஜய் கெளரவ விருந்தினராகவும் பங்கேற்று மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், தற்போது பட்டதாரிகள், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காகவும் சமுதாயத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். பண்டைய காலத்தில் நமது நாடு தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை செயல்முறையின் அடிப்படையில் ஒரு ஆதிக்க சக்தியாக இருந்தது என்பதை தெளிவுபடுத்தினர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் தம் சொந்த நாட்டின் கண்டுபிடிப்புகள் வலுவிழந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினர். டயனோரா டிவிகள் மற்றும் அம்பாசிடர் ஆட்டோமொபைல்கள் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள் எப்படி அழிந்து போனது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களால் மாற்றப்பட்டது என்பதை அவர்கள் விவரித்தனர்.
விழாவில், 2 பிஎச்டி பட்டதாரிகள் மற்றும் 31 தரவரிசை ரேங்க் பெற்றவர்கள் உட்பட 684 பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.