தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குறிப்பிட்டார்.
ராசிபுரம் நகர அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்படத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர அதிமுக அவைத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். நகரப் பொருளாளர் எஸ்.வெங்கடாஜலம் வரவேற்றுப் பேசினார். நாமக்கல் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் எஸ்.பி.கந்தசாமி, நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, கட்சியின் மகளிரணி இணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சரோஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராகா சு.தமிழ்மணி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று கட்சியினருக்கு தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை வழங்கிப் பேசினர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி மேலும் பேசியது: கட்சி என்றால் அதில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான செய்யும். ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தொண்டர்கள் அதையெல்லாம் மறந்து விட்டு ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். கடந்த தோல்விகள் நடந்தது நடந்ததாக இருக்கும். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றோம். இனி என்ன நடக்க வேண்டும் என்பதை தான் கருத்தில் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு. சட்டமன்றத் தேர்தல் என்பது வேறு, நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டோம் என்பது குறித்து சிந்திக்க தேவையில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி ஏதுமின்றி தனியாக நின்று வெற்றி பெற்ற பெருமை அதிமுகவிற்கு உண்டு.
அதிமுக என்பதை கருணாநிதி என்ற தீயசக்தியிடும் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. பல தடைகளை தாண்டி வளர்ந்து வந்துள்ளது. எனவே தொண்டர்கள் கூட்டணி பற்றி கவலைப்படக்கூடாது. வெற்றி ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றிட வேண்டும். அதிமுகவில் மட்டுமே உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். சாதாரண தொண்டரும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கொண்டு வந்த திட்டத்தையெல்லாம் என்று அவர்கள் கொண்டு வந்ததாக காட்டிக்கொள்கிறார்கள். மேலும் கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. இது குறித்து மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.
தற்போது தமிழகத்தில் அனைச்சு வரிகளும் உயர்த்தப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. கொலை கொள்ளை நடக்கிறது. அதிக அளவில் போதை பொருள் விற்பனை தமிழகத்தில் உள்ளது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. இதற்கெல்லாம் காரணம் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படுவார்கள். நல்ல நிலை மீண்டும் வரவேண்டும் எனில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டியது அவசியம். வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை பற்றி தொண்டர்கள் கவலைப்படக்கூடாது கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் வி.தமிழ்செல்வன், ராதாசந்திரசேகரன் உள்ளிட்ட கட்சியின் நகர, வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் என பலரும் பங்கேற்றனர்.
மின்தடை:
முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து தொண்டர்கள் பேட்டரியால் இயங்கும் மைக் கொண்டு வந்து கொடுத்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் மீண்டும் மின்சாரம் வருவதும் போவதுமாக இருந்தது. இதனால் மின்துறையை நிர்வகித்த முன்னாள் அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தின் போதே மின்தடையா என தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தொண்டர்களின் செல்போன் லைட் வெளிச்சத்தில் சிறிது நேரம் பேசினார்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றது பெருமை
கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளரும், மக்களவைத் தொகுதி தேர்தல் போட்டியிட்டு தோற்ற ராகா.சு.தமிழ்மணி பேசுகையில், கடந்த நாடளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுத்தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி கட்சிக்கு வெற்றி பெற்றுத்தர வேண்டும் எனக்கூறினார்.