தங்களது பட்டா நிலத்தை பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்கு தானமாக வழங்கிய ராசிபுரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்களான ராசிபுரம் ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் பகுதியில் சைனர் சாக்ஸ் என்று பாலிதீன் சாக்குப்பைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர்கள் பி.ஆர்.செளந்திரராஜன்,பி.நடராஜன். இவர்கள் பல ஆண்டுகளாக ராசிபுரம் ரோட்டரி சங்கத்தில் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துபல சமுதாய சேவைகள் செய்து வருகின்றனர். இவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் கொல்லிமலை திண்டு கிராமத்தில் உள்ளது. தற்போது இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.30 லட்சம். இந்த நிலத்தில் அரசு சமுதாயக்கூடம் அமைத்து கொடுப்பதால் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் பயன் பெறுவர் என்ற அடிப்படையில் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தை அரசுக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர். இதனையடுத்து அரசு பெயரில் தானமாக வழங்கிய நிலத்தின் கிரையப்பத்திரத்தை தொழிலதிபர் பி.ஆர்.செளந்திரராஜன், பி.நடராஜன், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், இ.ஆர்.சுரேந்திரன், டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், ஏ.மஸ்தான், நடராஜன் ஆகியோர் நேரில் சென்று நாமக்கல் ஆட்சியர் ச.உமாவிடம் இதற்கான பத்திரத்தை ஒப்படைத்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ச.உமா அவர்களை பாராட்டி சால்வை அணிவித்து கெளரவித்தார். இவர்களுக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.