ராசிபுரம் ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கான எதிர்கால கல்வி, தொழில் வழிகாட்டுதல் ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் எஸ். சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.ப்ரனேஷ் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் வினாயகா மிஷன் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயன்ஸ் டீன் மற்றும் இயக்குநர் பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசுகையில், மருத்துவத் துறையில் உள்ள எம்பிபிஎஸ் தவிர மற்ற படிப்புகள், கல்லூரிகள், அதன் முக்கியத்துவம் மற்றும் சம்பளம் போன்ற புள்ளி விவரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நீட் தேர்வு எழுதாமலே படிக்கக் கூடிய மருத்துவ படிப்புகளை பட்டியலிட்டு காட்டினார். மருத்துவமனை மேலாண்மைக்கு நிறைய எதிர்கால வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறினார்.
அடுத்ததாக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு உரையாற்றிய சிறப்பு விருந்தினரும், சேலம் ஆர். பி. சாரதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வருமான டாக்டர் முனுசாமி விஸ்வநாதன் பேசுகையில், தற்கால மாணவச் சமுதாய நிலை, அவர்களது எதிர்காலத்திற்கான பெற்றோர்களின் பங்கு குறித்தும், அலை பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மதிப்பெண் பெறும் வழிமுறைகள், ஒழுக்கத்தின் அவசியம், தொழில்நுட்பக் கல்வி முறைகள், மேற்கல்வித்துறை தேர்வு குறித்தும் பேசினார். மேலும் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் டி.வித்யாசாகர், மாணவ ஒருங்கிணைப்பாளர் பி.ராஜேஸ்கண்ணன், ஆசிரியர்கள் என்.சுஜாதா,ஆர்.காயத்ரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.