கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல், கட்டிடங்கள் அதிகரிப்பு, வாகனம், மக்கள் தொகை பெருக்கும் ஆகியவற்றை கருத்தில் ராசிபுரம் நகரப் பேருந்து நிலையத்தை இடமாற்றம் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையத்திற்கு தனியாரிடம் ரூ.7.02 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டது. தொடர்ந்து கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் 2024-25 கீழ் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு ரூ.10.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நட்டுவைத்து பணிகள் தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் பூமிபூஜையில் பங்கேற்று அடிக்கல் நட்டு வைத்து பேருந்து நிலையத்திற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.

இப்புதிய பேருந்து நிலையம் 52 கடைகள், 30 பேருந்துகள் நிறுத்துமிடம், 2 உணவு விடுதிகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் – 1, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் – 1, நேரம் காப்பாளர் அறை – 1, காவலர் அறை – 1, தாய்மார்கள் பாலுட்டும் அறை -1 உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 28,455 சதுர மீட்டர், தற்போது 16,200 சதுர மீட்டர் பரப்பளவு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் ஆர்.கவிதா சங்கர், முன்னாள் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி, ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் சு.கணேசன், வட்டாட்சியர் எஸ்.சரவணன், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்