நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலை, ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச.உமா ஆகியோர் தலைமையில் கடன் திட்டங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் சிறு, குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் வசதியாக்கல் முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.22.45 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளை வழங்கப்பட்டன. இம்முகாமில், நாமக்கல் எம்பி, வி.எஸ்.மாதேஸ்வரன், நாமக்கல் மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தெரிவித்தாவது,
நம் நாடு உற்பத்தியை மையமாக கொண்ட நாடு ஆகும். தொழில் தொடங்கி மேம்படுத்துதல் என்பதே நம் அரசின் நோக்கமாகும். நாமக்கல் மாவட்டத்தில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிட 850 ஹெக்டர் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கிட இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படுவதால் நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும். தமிழ்நாடு முதலமைச்சர் ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ராசிபுரத்தில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் 1997 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து நாமக்கல் மாவட்டம் தனியாக தோற்றுவிக்கப்பட்டது. புதியதாக மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு என புதியதாக மத்திய கூட்டுறவு வங்கியினை அறிவித்துள்ளார்கள். மேலும், சுமார் ரூ.90.00 கோடி மதிப்பில் டென்மார்க் தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன பால் பதப்படுத்தும் ஆலை, சுமார் ரூ.196 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் வீ.சகுந்தலா, நாமக்கல் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தலைவர் ந.இளங்கோ, தாட்கோ மாவட்ட மேலாளர் பா.இராமசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கா.முருகன், மண்டல மேலாளர் .ஸ்ரீநிவாஸ், மாவட்ட தொழில் மைய புள்ளி விபர ஆய்வாளர் .ம.மகேஷ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.