பேருந்து நிலையம்- மருத்துவமனைகள் மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்பட வேண்டும்: ராசிபுரம் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்ட சீமான் பேட்டி
தமிழக அரசு மருத்துமனைகள், பேருந்து நிலையம் போன்றவற்றை மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார்.
ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றம் செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் ராசிபுரம் நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்லதால், இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து ராசிபுரம் பேருந்து நிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ள இடத்தை சீமான் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் இந்த இடத்தில் தான் மருத்துவமனையோ, பேருந்து நிலையத்தோ அமைக்க வேண்டும் என்று கேட்டு அதனையடுத்து மாற்றம் செய்தால் ஏற்கலாம். ஆனால் சென்னை புதிய விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பரந்தூர், கிளாப்பாக்கம் பேருந்து நிலையம் உட்பட ஏதுவானாலும் அரசு தன்னிச்சையாக மாற்றம் செய்வது ஏற்க இயலாது. தமிழகத்தில் சொத்து வரி, மின்சார கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், மருத்துமனை, பேருந்து நிலையம் போன்றவற்றை சுய நலனுக்காக மாற்றம் செய்வது நல்லதல்ல. ஆளும் அரசாங்கம் இஷ்டத்துக்கு நடக்கக்கூடாது. வேறு ஆட்சி வந்தால்,இதனை இடித்து இடமாற்றுவோம். இது தேவையா என சிந்திக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என செங்கலை தூக்கிக்கொண்ட பிரச்சாரம் செய்தது போல், இங்கு பேருந்து நிலையம் கட்டினால், செங்கலை தூக்கிக்கொண்டு போராட்டம் நடத்துவோம் என்றார். ராசிபுரம் பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை சீமான் பார்வையிட்ட போது நாம் தமிழர் கட்சியினர், பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.