லாரி போக்குவரத்து தொழில் செய்து கொண்டு நாமக்கலில் ஏ. எஸ். பேட்டையில் வசித்து வசித்து வந்தவர் ராமசாமி மகன் சண்முகம் (59)). கடந்த 2023 ஆகஸ்ட் 14 அன்று நாமக்கல்லில் திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் சண்முகம் சென்று கொண்டிருந்த போது பள்ளி மோதியதில் பலத்த விபத்துக்குள்ளானார். அவசர சிகிச்சைக்காக நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி விபத்துக்குள்ளான சண்முகம் கடந்த 2023 செப்டம்பர் 5 அன்று இறந்து விட்டார்.
நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் விபத்தில் இறந்த சண்முகம் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். சங்க உறுப்பினர்களுக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பாலிசியை பிரீமியம் பெற்றுக் கொண்டு வழங்கியிருந்தது. சண்முகத்தின் இறப்புக்குப் பின்னர் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 10 லட்சத்தை வழங்குமாறு விண்ணப்பம் செய்துள்ளார்கள். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் சண்முகத்தின் இறப்புக்கு விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணம் அல்ல என்றும் அவருக்கு இருந்து வந்த நோய்தான் காரணம் என்றும் கூறி இன்சூரன்ஸ் பணத்தை வழங்க மறுத்துவிட்டது.
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செயலால் அதிர்ச்சி அடைந்த இறந்தவரின் சண்முகத்தின் மனைவியும் அவரது வாரிசுகளும் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த 2024 ஜூன் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் வழக்கறிஞர் ராஜ்குமாரை மத்தியஸ்தராக நியமனம் செய்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் உத்தரவு பிறப்பித்தார். சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்தில் இறந்தவரின் மனைவி மணி (56), மகன் சதீஷ் (33), மகள் உமா (31) ஆகியோருக்கு 15 நாட்களுக்குள் ரூபாய் 10 லட்சம் வழங்க நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.