நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. சர்வதேச மருந்தாக்கியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட செப்டம்பர் 25ம் தேதி, உலக மருந்தாளுநர் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இந்திய மருந்தியல் கழகம் அங்கீகரித்து, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 25ம் தேதி மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மருந்தாளுநர்களின் பங்கை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது.
மருத்துவமனையின் மருந்து கிடங்கு அலுவலர் சகாதேவன் தலைமை வகித்தார். அறுவை சாதன மருந்து கிடங்கு அலுவலர் தில்சாத்பேகம், மருந்தாளுநர்கள் கலைச்செல்வன், சாலை சுப்பிரமணி, முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை மருந்தாளுநர் வி.ராஜீ அனைவரையும் வரவேற்று மருந்தாளுநர்களின் பணியின் சிறப்பை எடுத்துரைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவமனையின் டீன் சாந்தா அருள்மொழி கலந்து கொண்டு அனைத்து மருந்தாளுநர்களின் பணி சேவை குறித்து வாழ்த்தி பேசினார். மருத்துவ கண்காணிப்பாளர் குணசேகரன், மருந்தாளுநர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். இறுதியில் தலைமை மருந்தாளுநர் குமரேசன் நன்றி கூறினார்.