தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கிய குட்டலாடம்பட்டி ஊராட்சி செயலாளரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்டலாடம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்தோசம் (38). இவர் அந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனக்கு பணி வழங்கும்படி ஊராட்சி செயலாளர் தங்கதுரையை (46) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் அணுகியுள்ளார். எனினும், வேலை வழங்க ரூ.1,000 லஞ்சம் தர வேண்டும் என தங்கதுரை நிர்பந்தித்து வந்ததாக தெரிகிறது. இவர் இதே போல் கிராமத்தில் உள்ள வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களிடம் பணி வழங்கிட லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்கதுரை கேட்டபடி லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத சந்தோசம் கடந்த 18-ம் தேதி நாமக்கல்லில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்துள்ளார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி., சுபாஷினி உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமையில் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் அறிவுறுத்தல்படி வியாழக்கிழமை ஊராட்சி நூலகத்தில் இருந்த ஊராட்சி செயலாளர் தங்கதுரையிடம், சந்தோசம் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் ஊராட்சி செயலாளர் தங்கதுரையை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தங்கதுரையின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள நரசிங்கபுரம். ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் சுரண்டல்: தமிழகம் முழுவதும் இதே போன்ற அனைத்து ஊாரட்சிகளிலும் தொழிலாளர்களை சுரண்டும் இதே நிலைதான் உள்ளது எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் பிற ஊராட்சிகளில் இது போன்ற புகார் இருந்தால் நாமக்கல் மாவட்ட ஊழல்தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி., சுபாஷினி தெரிவித்துள்ளார்.