நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் தேவராஜு என்பவர் மனைவி ஆர். உமாராணி (45). இவரது கணவர் தேவராஜ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமியமாக ரூ 37,613/- செலுத்தி ரூ.75 லட்சத்துக்கு 40 ஆண்டுகால காப்பீடு செய்துள்ளார். கடந்த 2020 அக்டோபரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி 2020-ல் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் தேவராஜ் மனைவி உமாராணி இன்சூரன்ஸ் தொகை ரூ.75 லட்சத்தை வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இறந்தவருக்கு இருதய நோயும், சர்க்கரை நோயும் ஏற்கனவே இருந்துள்ளது என்று காரணம் காட்டி, அதனை மறைத்து அவர் இன்சூரன்ஸ் பாலிசியை தங்களிடம் பெற்றுள்ளார் என்றும் இதனால் இன்சுரன்ஸ் பணம் வழங்க முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் உமாராணிக்கு கடந்த 2023 மார்ச் மாதத்தில் தெரிவித்துவிட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2023 மே மாதத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இருதரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவரின் மனைவிக்கு இன்சூரன்ஸ் தொகையை மறுத்தது சேவை குறைபாடு என தீர்ப்பளித்துள்ளனர். இன்சூரன்ஸ் செய்திருந்தவருக்கு ஏற்கனவே இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது என்பதை நிரூபிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் போதிய சாட்சியம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல் செய்துள்ள கரோனாவால் இறந்த தேவராஜுவின் மனைவி உமாராணிக்கு நான்கு வார காலத்துக்குள் இன்சூரன்ஸ் தொகை ரூ. 75 லட்சத்தையும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கான இழப்பீடாக ரூ. 5 லட்சத்தையும் நான்கு வாரங்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.