ராசிபுரத்தில் மனவளக்கலை மன்றம் சார்பில் நடைபெற்ற மனைவி நலவேட்பு விழாவில் திரளான தம்பதியினர் பங்கேற்று சங்கல்பம் செய்தனர். அறிவித்திருக்கோவில்- ஆன்மீக மையம், ராசிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, அருள்மிகு காசிவிநாயகர் இயற்கை நலவாழ்வு மையம் ஆகிய இணைந்து ஆண்டகளூர்கேட் காசிவினாயகர் ஆலய வளாகத்தில் அன்னை லோகாம்பாள் 110-வது பிறந்த தினவிழா மற்றும் மனைவி நல வேட்பு விழாவினை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
இதற்கான நிகழ்வில், சேலம் மண்டல உலச சமுதாய சேவா சங்கத் துணைத் தலைவரும், காசி வினாயகர் மனவளக்கலை மன்றத் தலைவருமான கை.கந்தசாமி வரவேற்றார். சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் டாக்டர் பி.வி.தனபால் தலைமை வகித்தார். ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் முன்னிலை வகித்தார். உலக சமுதாய சேவா சங்கத்தின் இயக்குனரும் (கல்வி) முதுநிலை பேராசிரியருமான கே.பெருமாள், மாண்புமிகு மனைவி என்றத் தலைப்பில் பேசினார். இதில் பேசிய அவர், ஒவ்வொரு மனிதனும் தனி மனித அமைதியுடன் நிறைவான வாழ்வை வாழ வேண்டும். தனிமனித அமைதியே உலக அமைதியை ஏற்படுத்தும் என்பதால் இதற்கான வழியான யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். உலக சமுதாய சேவா சங்கம் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. தனி மனித அமைதியே குடும்ப அமைதியை ஏற்படுத்தும். குடும்ப அமைதியே சமுதாய அமைதாய அமைதியையும்,சமுதாய அமைத்தி நாட்டின் அமைதியையும், நாட்டின் அமைதி உலக அமைதியும் ஏற்படுத்தும். சமுதாய சேவை சங்கம் என்பது சன்னியாசிகளை உருவாக்குவது அல்ல. நல்ல இல்லற வாழ்க்கை, உலக வாழ்க்கையை உருவாக்குவதற்காக செயல்பட்டு வருகிறது. குடும்ப வாழ்வில் கணவன்-மனைவி உறவு சுமூகமாக இருந்தால் நிறைவான வாழ்க்கை என்பதாகும். குடும்ப உறவில் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாக மனப்பான்மை இருக்க வேண்டும். இதனை எந்த அளவிற்கு பின்பற்றுகிறோம் என்பதை பொருத்துத் தான் குடும்ப உறவுகள் நீடித்து இருக்கும். மனைவி என்பவர் வாழ்வின் இறுதிவரை நம்முடன் இருப்பவர் என்பதால் இந்த உறவில் இனிமையான சூழல் இருக்க வேண்டும். ஒரு மனிதன் இறந்தால் பாவ, புண்ணியம் செய்ததை பொருத்து சொர்க்கம், நரகம் செல்வார்கள் என சொல்லியுள்ளார்கள். இது நம்மை நல்வழிப்படுத்துவதற்காக சொல்லப்பட்டு என எடுத்துக்கொண்டாலும், குடும்ப ஒற்றுமையுடன், மகிழ்வுடன், மனநிறைவுடன் நாம் இருந்தாலே வாழும் போதே சொர்க்கத்தில் இருக்கிறோம் என்ற பொருள்படும் என்றார்.
முன்னதாக குரு வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து மனைவி நல வேட்பு நிகழ்வில் தம்பதியினர் பலர் பங்கேற்றனர். இதில் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்து தனி மனித அமைதிக்கும், குடும்ப அமைதிக்கும் சங்கல்பம் செய்தனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், உறுதுணையாக இருப்பது குறித்து உறுதிமொழி ஏற்றனர். விழாவில் துளிர் மருத்துவமனை டாக்டர் எஸ்.ராம்குமார், சுருதிமித்ரா தம்பதியினர், ஒய்வு பெற்ற வங்கி மேலாளர் கே.கதிர்வேல், எஸ்.லதா தம்பதியினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.