நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் காவிரி குடிநீர் 30 நாட்களாக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் ராசிபுரம்-திருச்செங்கோடு பிரதான சாலையில் புதன்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் விசைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. இப்பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் திரளானோர் காலி குடங்களுடன் ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் பிள்ளாநல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் திருச்செங்கோடு செல்லும் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. இதனையடுத்து சம்வப இடம் வந்து புதுசத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நீண்ட நேரம் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். ஆனாலும் நீண்டநேரம் மறியலை பொதுமக்கள் கைவிடவில்லை. பின்னர் குடிநீர் வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டுத் திரும்பினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்துப் பாதித்தது.