ராசிபுரம் நகராட்சி சார்பில் நகரில் உள்ள 27 வார்டுகளிலும் செயல்பாட்டில் இருந்து வந்த பழைய மின்விளக்குகள் ரூ.1.25 கோடி மதிப்பில் புதிய எல்இடி மின்விளக்குகளாக மாற்றியமைக்க கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு நகரம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் புதிய எல்இடி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பழைய மின்விளக்குகள் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால் இது குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மக்கள் தன்னுரிமைக் கட்சி நிறுவனர் நல்வினை செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதி முழுவதும் இதுவரை டியூப் லைட்கள், சிஎப்எல் பல்புகள் போன்றவை சாலைகளில் பயன்பாட்டில் இருந்து வந்தன. மின்நுகர்வு அதிகரிப்பை கருத்தில் கொண்டு மின் செலவை குறைக்க எல்இடி பல்புகள் மாற்றியமைக்க நகராட்சி முடிவு செய்தது. இதனையடுத்து நகரில் உள்ள 27 வார்டுகளிலும் மொத்தம் உள்ள 1863 மின்விளக்குகளையும் மாற்றியமைக்க சுமார் ரூ.1.25 கோடி மதிப்பில் புதியதாக எல்இடி விளக்குகள் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நகரில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து பல்ப் செட்கள் திரும்ப எடுத்துக்கொண்டு புதிய பல்ப்கள் பொருத்த வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பயன்பாடற்றது என கழற்றப்பட்ட பழைய பல்ப்கள் ரூ.31140 -க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏலம் விடப்பட்டு நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த பழைய பல்புகள் நகராட்சி வளாகத்தில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. இதனை சமூக நல அமைப்பினர் பலரும் சமூக ஊடகங்களில் எடுத்து வெளியிட்டனர். லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட பழைய பல்ப்புகள் ரூ.31140 என்ற குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது குறைவான விலையில் இருப்பதாக உரிய விசாரணை தேவை என வலியுறுத்துகின்றனர்.