நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு தனி வழிப்பாதை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். நுகர்வோர் நீதிமன்றம் கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மூன்று பக்கம் மட்டுமே சுற்றுச்சுவர் இருந்து வந்தது. ஒரு பக்க சுற்றுச்சுவர் இல்லாமல் நீதிமன்ற வளாகம் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. அண்மையில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார் வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தின் நான்காவது பக்கமும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கட்டிடம் முழுவதும் புதிதாக வர்ணம் பூசப்பட்டது.
நீதிமன்ற வளாகம் மண் தரையாக இருந்தது. மழைக்காலங்களில் நுகர்வோர் நீதிமன்ற வளாகத்தில் நுழைவாயிலில் இருந்து நீதிமன்ற கட்டிடத்தை அடைவதற்கு களிமண் தரை ஆபத்தானதாக என்பதை கருத்தில் கொண்டு சமீபத்தில், நீதிமன்ற நுழைவாயில் இருந்து பின்பக்க சுற்றுச்சுவர் வரை பேவர் பிளாக் தரையாக நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கம் அமைத்துக் கொடுத்தது. நுகர்வோர் நீதிமன்றத்திற்கும் மாவட்ட நீதிமன்றத்திற்கும் இடையே இருந்த அரை ஏக்கர் நிலமானது வழக்கறிஞர்களுக்கு அலுவலகங்கள் கட்ட ஒதுக்கப்பட்டதாகும். இந்த பகுதியில் ஆள் உயர முள் மரங்கள் வளர்ந்து பாம்புகள் நடமாட்டம் இருந்தது. இந்த பகுதியை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் வேண்டுகோளின்படி சமீபத்தில் நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து கொடுத்துள்ளது.
பல மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நுகர்வோர் நீதிமன்றம் செயல்படுகிறது. ஆனால் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து நேரடியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு நுழைவாயில் இல்லை. இதனால், பொதுமக்களும் வழக்கறிஞர்களும் மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் சாலை வழியாக சென்று நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். கிராமங்களில் இருந்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வருவோர் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று வழி தெரியாமல் தடுமாறுகின்றனர். இதனை தவிர்ப்பதற்காக திருச்செங்கோடு சாலையில் பிரிவிலிருந்து நுகர்வோர் நீதிமன்றம் செல்லும் வரை நான்கு வழிகாட்டும் பலகைகளை சமீபத்தில் நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் நுகர்வோர் நீதி மன்றத்துக்கு பின்புற சுற்றுச்சுவரில் மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவரின் முயற்சியால் புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் பின்பக்கம் உள்ள ஒரு நுழைவாயிலை மாற்றி நுகர்வோர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலுக்கு நேரெதிரில் அமைத்தால் பொதுமக்களும் வழக்கறிஞர்களும் நெடுஞ்சாலையில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வழியாக நேரடியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வந்து செல்ல இயலும் என்பது வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பலரின் கருத்து.
இந்தக் கோரிக்கையை நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற புதிய நீதிமன்ற தொடக்க விழாவில் சிவில் வழக்கறிஞர் சங்க தலைவர் டி. மோகன்ராஜ் வலியுறுத்தி பேசினார். இதற்கான கோரிக்கையை மனுவும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே, நெடுஞ்சாலையில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வழியாக நுகர்வோர் நீதிமன்றத்துக்கு வந்து செல்ல மாவட்ட நீதிமன்றத்தின் பின்பக்க சுற்றுச்சுவரில் உள்ள நுழைவாயிலை மாற்றி அமைத்து தருமாறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் கடிதமும் அளித்துள்ளார்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் விரைந்து தீர்ப்பு:
10 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 18 மாதங்களில் சுமார் 500 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு, தற்போது, 2023 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட நுகர்வோர் வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அதிக காலம் நிலுவையில் இருந்த வழக்குகள் கோவையில் இருந்து நாமக்கல்லுக்கு மாற்றம் செய்யப்பட்டு 143 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 36 வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைத்து இந்தியாவிலேயே மாவட்ட அளவில் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு அதிக வழக்குகளை சமரசம் மூலம் தீர்த்து வைத்த நீதிமன்றமாக நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது. தற்போது நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி பலர் வருவதால், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நெடுஞ்சாலையில் இருந்து மாவட்ட நீதிமன்ற வளாகம் வழியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வெளியே ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே வழக்கறிஞர்கள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.