ராசிபுரம் அருகேயுள்ள குருக்கப்புரம் ஸ்ரீபாரதிய வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாவது தேசிய விண்வெளி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்டு-23 அன்று ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து குருக்கப்புரம் ஸ்ரீபாரதிய வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலாவது தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.குணசேகரன் வரவேற்றார். ஆசிரியர் எஸ்.எஸ்.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ஒய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி க.இளங்கோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களிடையே பேசினார். விழாவில் பேசிய அவர், விண்வெளி ஆய்வில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா கைகோர்துள்ளது. நிலவில் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்பதும் , நிலவில் ரோவரை இறக்கிய 4-வது நாடு இந்தியா என்பதும் நமக்கு பெருமைக்குரியது. எதிர்காலத்தில் அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் நமது நாடு பிறநாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் ஞான்யான் மிஷன் 2025-ல் வெற்றியடையும். அதே போல் 2035-ம் ஆண்டுக்குள் பாரத விண்வெளி நிலையத்தை அமைப்பதும், 2045-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்வதும் நாட்டின் திட்டங்களாக இருக்கும். இன்றைய மாணவர்கள் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றை பின்பற்றி செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார். மேலும் முன்னதாக மாணவர்களின் அறிவியல் படைப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதில் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.