முறைகேடு செய்து ஒய்வு பெற்ற அரசு அலுவலர்களே உஷார் ? ஒய்வு பெற்றாலும் லஞ்ச ஒழிப்புத்துறை விடாது துரத்தும்…
தமிழக அரசின் பல்வேறு துறை அதில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு பணம் கொழிக்கும் துறையாக இருந்து வருகிறது. குறிப்பாக பத்திரப்பதிவுத்துறை, மோட்டார் வாகனத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம். இதில் இருப்பவர்கள் பதவியை பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அனைவரும் எதிலும் சிக்குவதில்லை. சிலர் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை பொறியில் சிக்கி வழக்கை சந்திக்கின்றனர். அதுவும் அதிமேதாவி அலுவலர்கள் பேச்சைக்கேட்டு அப்பாவித்தனமாக இருந்து முறைகேடு செய்து சிக்குபவர்கள் ஏரளாம்.
வலையில் சிக்கிய பேரூராட்சி அலுவலர்கள்:
அரசு அலுவலர்கள் பலர் பல முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும், சிக்காமல் ஒய்வு பெற்று நிம்மதியாக சென்றுவிடுவர். ஆனால் அது இனி செல்லாது என்பதை நிரூபித்துள்ளது கண்ணியம்மிக்க நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை. ஆம் நாமக்கல்,சேலம் மாவட்டங்களில் பணியாற்றி 2020-ல் ஒய்வு பெற்ற பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் , என்.எம்.முருகன் (62), நாமக்கல் மாவட்டத்தின் நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் நிர்வாக அலுவலராக இருந்து 2018-ல் ஒய்வு பெற்ற டி.மல்லிகை சுந்தரம் (64) ஆகியோர் ஒய்வு பெற்ற தங்களது காலத்தை நிம்மதியாக கழித்து வரும் நிலையில் பணிகாலத்தில் செய்த ஊழல் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்தில் தற்போது சிக்குண்டுள்ளனர். இதே போல் மல்லசமுத்திரம் பேரூராட்சியின் நிர்வாக அலுவலராக இருந்த கே.அப்துல்லா (49) (தற்போது கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செயல் அலுவலர்), ஆலாம்பாளையம் பேரூராட்சியின் செயல் அலுவலராக இருந்த எம்.எஸ்.சண்முகம் (60) (தற்போது ஈரோடு மாவட்டம் லக்கம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்) ஆகியோரும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் சிக்கியுள்ளனர்.
புகை அடிக்கும் கருவி அதிகவிலைக்கு வாங்கி ஊழல்: இவர்கள் அனைவரும் சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து புகை அடிக்கும் கருவி வாங்கியதில் ரூ.9,30,312 ஊழல் செய்துள்ளதாக கண்டறியப்பட்டதையடுத்து முன்னாள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முருகன் மட்டுமின்றி, முன்னாள், இந்நாள், செயல் அலுவலர்கள் மீதும், இயந்திரம் சப்ளை செய்த 3 தனியார் நிறுவன உரிமையாளர்கள்என மொத்தம் 7 பேர் மீதும் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட பேரூராட்சிகளின் நிர்வாக அலுவலர்களாக பணியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் ரூ.265500 மதிப்புள்ள புகையடிக்கும் கருவியை ரூ.575604 கொடுத்து தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் 3 பேரூராட்சிகளிலும் மொத்தம் ரூ.930312 ஊழல் செய்துள்ளனர். இதற்கு அப்போது சேலம்-நாமக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக இருந்த என்.எம்.முருகன் உடந்தையாக இருந்துள்ளார் என்பதும் அவர் மீது குற்றச்சாட்டு. எனவே இவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையால் தற்போது நாமக்கல் நீதிமன்றத்தில் எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்த 7 பேர் மீது நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.
முறைகேடு புகாரில் சிக்கியுள்ள ஒய்வு பெற்ற பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் என்.எம்.முருகன் சொந்த ஊரான மதுரையில் தற்போது வசித்து வருகிறார். புகாரில் சிக்கியுள்ள பேரூராட்சியின் செயல் அலுவலர் கே.அப்துல்லா கோவை மாவட்டம் கணவாய் பகுதி்யை சேர்ந்தவர். இதே போல் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த மல்லி்கை சுந்தரம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர். எம்.எஸ்.சண்முகம் கரூர் மாவட்டம் புகளூர் பகுதியை சேர்ந்தவர்.
லஞ்ச ஒழிப்புத்துறை வீசியுள்ள இந்த வலையில் சிக்கியவர்கள் இவர்கள் மட்டும் தானா ? அல்லது தமிழகம் முழுவதும் இது போன்ற வலை வீசப்பட்டுள்ளதா ? என பார்க்க வேண்டும். அப்படியிருந்தால் அன்றைய உள்ளாட்சியை நிர்வகித்து வந்த மணியானவருக்கும் சேர்த்து இந்த வலைவீசப்பட்டுள்ளதா என்பதை பொருத்திருந்ததான் கவனிக்க வேண்டும். மேலும் எந்திரம் சப்ளை செய்த நிறுவனத்தின் தொடர்புகள் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
எனவே அரசு ஊழியர்கள் பணி ஒய்வு பெற்றுவிட்டால் நம்மை இனி எதுவும் செய்ய முடியாது என எண்ண வேண்டாம். ஒய்வு பெற்றாலும் அரசு எந்திரம் சாட்டையை சுழற்றும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
உஷாரய்யா.. உஷாரு…