நாமக்கல் நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுச்சுவர் அமைப்பதுடன், கழிப்பிட வசதியும் ஏற்படுத்தித்தர வேண்டும் என இந்திய மாணவர்கள் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கத் தலைவர் மு.தங்கராஜ் தலைமையில் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நல்லிப்பாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால் பொதுவெளியை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். அதேபோன்று பள்ளி சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் பள்ளி நேரங்களில் பள்ளி வளாகத்தில் அருகில் உள்ள பொதுமக்கள் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். அதேபோன்று சமூகவிரோதிகள் இரவில் பள்ளியில் போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் மாணவ மாணவியர் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பள்ளிக்கு சுற்றுசுவர், மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.