ராசிபுரத்தில் ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்
எல்ஐசி பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்த தொடர்ந்து வலியுறுத்தல்
ராசிபுரம் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை பட்டப்பகலில் வழிமறித்து கீழே தள்ளி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர்கள் பறித்து சென்றுள்ளனர். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறையில் ஆய்வக உதவியாளராக உள்ள சுதா (42). இவர் புதன்கிழமை பணி முடித்து மாலை சுமார் 4 மணி அளவில் டிவிஎஸ் வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். ஆண்டகளூர்கேட்டியிலிருந்து இவரை பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து அப்பாச்சி பைக்கில் வந்த இரு இளைஞர்கள் எல்ஐசி எதிரே அவரை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ராசிபுரம் நோக்கி தப்பினர். அப்பெண்ணை கீழே தள்ளியதால் அவர் காயமடைந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தப்பியோடிய இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எல்ஐசி பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வலியுறுத்தல்: ராசிபுரம் எல்ஐசி பகுதியில் ரயில்வே பாலம் உள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இதுபோன்ற வழிபறி சம்பவங்கள் நடைபெறுவதால் காவல்துறை தரப்பில் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி., ராசிபுரம் காவல்துறைக்கு அப்பகுதியினர் ஏற்கனவே கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். தற்போது அப்பகுதியில் வழிபறி சம்பவம் நடந்துள்ள நிலையில், எல்ஐசி மேம்பாலம் பகுதியில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.