4 வாரத்தில் தரவில்லையெனில் நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என்றும் நீதிபதி வீ.ராமராஜ் உத்தரவு.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆனங்கூர் கிராமத்தில் வசிப்பவர் பழனியப்பன் மகன் தங்கவேல் (82). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அசல் ஆவணத்தை அடமானம் வைத்து எல்ஐசி ஹவுசிங் லோன் நிறுவனத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு ரூ 65,000/- வீட்டுக் கடன் பெற்றுள்ளார். இவர் கடன் ஒப்பந்தப்படி மாதாந்திர கடன் தவணைத் தொகைகளை செலுத்தாததால் வீட்டு கடன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புப்படி கடனின் அசல், வட்டி மற்றும் வழக்கு செலவுத்தொகை முழுவதையும் தங்கவேல் கடந்த 2004 ஆம் ஆண்டு கடன் வழங்கிய நிறுவனத்துக்கு செலுத்தி விட்டார். அசல் ஆவணத்தை ஒரு மாதத்தில் திருப்பி அளிப்பதாக கடன் வழங்கிய நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
வாழ்க்கை சூழலில் அசல் ஆவணத்தை வீட்டு கடன் நிறுவனத்தில் இருந்து பெற மறந்து போன தங்கவேல் கடந்த 2016 ஆம் ஆண்டு சொத்தை விற்பனை செய்ய முயற்சித்த போது அசல் ஆவணம் கடன் வழங்கிய நிறுவனத்தில் இருந்து பெறப்படவில்லை என்பதை அறிந்துள்ளார் 2016 ஆம் ஆண்டு கடன் வழங்கிய வீட்டு கடன் நிறுவனத்தை அணுகிய போது தங்கவேல் எவ்வித கடனையும் செலுத்த வேண்டிய நிலுவை இல்லை என்ற சான்றிதழை நிறுவனம் வழங்கியதோடு அசல் ஆவணத்தை ஒரு மாதத்தில் திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அசல் ஆவணத்தை திரும்ப வழங்குமாறு பலமுறை கேட்டும் வீட்டுக் கடன் நிறுவனம் ஆவணத்தை திரும்ப வழங்காததால் கடந்த 2023 மே மாதத்தில் தங்கவேல் வீட்டு கடன் நிறுவனத்திற்கு மீண்டும் ஆவணத்தை திரும்ப வழங்குமாறு கடிதம் வழங்கியுள்ளார். இதன் பின்னரும் ஆவணத்தை அந்த நிறுவனம் திரும்ப வழங்காததால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் மீது கடந்த 2023 டிசம்பரில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
வாடிக்கையாளர் கடனை செலுத்த தவறியதால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது அசல் ஆவணத்தை அங்கு தாக்கல் செய்து விட்டோம். அதன்பிறகு தங்களது வழக்கறிஞர் இறந்து விட்டதால் உடனடியாக ஆவணத்தை திரும்ப பெற முடியவில்லை. அசல் ஆவணத்தை திரும்ப வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு தாங்கள் காரணம் அல்ல என வீட்டு கடன் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கில் 13-08-2024-ல் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் எல்ஐசி வீட்டு வசதி கடன் நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்திய பின்னரும் 19 ஆண்டுகள் அவரது அசல் ஆவணங்களை திரும்ப வழங்காமல் இருந்த எல்ஐசி வீட்டு வசதி கடன் நிறுவனம் வாடிக்கையாளருக்கு நான்கு வாரங்களுக்குள் அவரது அசல் ஆவணத்தையும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் அசல் ஆவணத்தை வழங்க தவறினால் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் ஐந்தாயிரத்தை இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனம் மீது சங்ககிரி அருகே உள்ள பச்சாம்பாளையம் கருக்கங்காட்டில் வசிக்கும் ராமசாமி மகன் செல்வகுமார் தாக்கல் செய்திருந்த மற்றொரு வழக்கில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிபடி பணத்தை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்த வாடிக்கையாளருக்கு மருத்துவச் செலவுக்காக ரூபாய் 88 ஆயிரமும் சேவை குறைபாட்டுக்காக ரூபாய் 50,000 இழப்பீடு ரூபாய் 50 ஆயிரமும் வழக்கின் செலவு தொகையாக ரூபாய் 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 1,44,000/- ஐ நான்கு வாரங்களுக்குள் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.