நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி தோட்டக்கூர்பட்டி கிராம ஊராட்சியில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயன் நினைவாக ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நினைவு அரங்கினை செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில் 06.09.2021 அன்று 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது செய்தித் துறை அமைச்சர் “தமிழுக்கும். தமிழக மக்களுக்கும் அயராது உழைத்தவரும், சமூகநீதிக் கோட்பாடுகளுக்காகச் சட்டவடிவம் கொடுத்தவருமான, சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் சேவைகளை நினைவுகூறும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஓர் அரங்கம் அமைக்க ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, 10.05.2023 தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.ப.சுப்பராயனுக்கு ரூ.2.50 மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் நவணி தோட்டக்கூர்பட்டி கிராம ஊராட்சியில் நினைவு அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப.சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம். நவணி தோட்டக்கூர்பட்டி கிராம ஊராட்சியில் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கலத்திற்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இந்திராணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.