ரோட்டரி மாவட்டம் 2982, ரோட்டரி மாவட்டம் 3212 சேர்ந்த விருதுநகர் ரோட்டரி கிளப், சென்னை ரத பரிஷான் அறக்கட்டளை ஆகியவை இணைந்து அரசு பள்ளியின் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி முகாமினை அண்மையில் நடத்தியது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆர். புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம். முருகானந்தன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை ஜாய்சி அன்னம்மாள் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியின் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தடய அறிவியல் தொடர்பான பயிற்சிகள் அளித்தனர். ஆய்வக உபகரணங்கள், ரசாயன உப்புக்கள், அமிலங்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சியாளர் ஆர்.நவீன் குமார் பயிற்சியளித்தார். ரோட்டரி மாவட்ட மகிழ்வு பள்ளிகள் குழு தலைவர் கே.எஸ். கருணாகர பன்னீர்செல்வம் பயிற்சியின் நோக்கம், விஞ்ஞான ரதம் குறித்தும் பேசினார். விழாவில் மாவட்ட ரோட்டரி சங்கத்தின் பப்ளிக் இமேஜ் சேர்மன் அம்மன் ஆர்.ரவி, ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2025 -26 ஆம் ஆண்டின் தலைவர் இ.என். சுரேந்தர், முன்னாள் தலைவர்கள் ஆர்.சிட்டி வரதராஜன் ,சி.கே. சீனிவாசன் மூத்த உறுப்பினர் என்.தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி குறித்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி.சிவகுமார், மாவட்ட லிட்டரசி கமிட்டி தலைவர் வெங்கடேஸ்வரா குப்தா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.