புதுச்சத்திரம் ஒன்றியப் பகுதியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின் படி புதுச்சத்திரம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட கதிராநல்லூர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2023-24ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற்று தமிழ் , அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தோல்வியுற்ற வ.குமரன் என்ற மாணவர் மீண்டும்தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டார்.
பத்தாம் வகுப்பில் பயின்று இடைநின்ற ச.மோனிசா என்ற மாணவியின் பெற்றோர் , தங்களது மகளுக்கு நேரம் சரியில்லை என்பதால் பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை என்று குடிசைத் தொழிலுக்கு அனுப்பியது தெரியவந்தது. இம்மாணவி வேலை செய்த இடத்திற்கு சென்று மாணவி தேர்வு எழுத உரிய வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி மீண்டும் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டு மாணவி தேர்வு எழுத இசைவு தெரிவித்தார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டு பராமரிப்பில் இருந்து வரும் மாணவர் கு. ஜனா என்பவரை திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து பத்தாம் வகுப்பு தேர்வெழுத வழிகாட்டியதில் பெற்றோரும் இசைவு தெரிவித்தனர்.
ஆ.மௌனிகா என்ற மாணவி புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 461 மதிப்பெண் பெற்ற நிலையில், குடும்ப சூழல் காரணமாக மேல் வகுப்பு தொடர முடியாமல் இருந்தது தெரியவந்தது. கள ஆய்வாளர்கள் உரிய ஆலோசனையும் மேற்படிப்பு தொடர்வதற்கு ஏதுவாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் கலைக் கல்லூரியில் இளநிலை பொருளியல் படிப்பதற்கு கல்லூரியில் காலியிடம் உறுதி செய்து சேர்க்கை பெற அறிவுறுத்தபட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு ஆய்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) க. ரவிச்சந்திரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) வெ.சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் வட்டார கல்வி அலுவலர்கள் எம். செந்தமிழ்ச்செல்வி, இ.பி. சுப்ரமணியம்
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ம்.ஏ. மகேஸ்வரி, கதிராநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.தனலட்சுமி, வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சொ. ரோஸ்னா, இரா.செல்வராணி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இக்கல்வியாண்டில் இடைநிற்றலுக்கு வாய்ப்பு உள்ள மாணவ மாணவியர் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது.