Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் நகர திமுக செயலாளருக்கு எதிராக அணி திரளும் நகர்மன்ற உறுப்பினர்கள்

ராசிபுரம் நகர திமுக செயலாளருக்கு எதிராக அணி திரளும் நகர்மன்ற உறுப்பினர்கள்

ராசிபுரம் நகர திமுக செயலாளராக உள்ள என்.ஆர்.சங்கருக்கு எதிராக திமுகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் அணி திரண்டு குரல் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்சனையில் ஒரு சிலர் மட்டும் ஆதாயம் அடைந்துள்ளனர் என வெளியில் தகவல் பரவிவருவது தான் என கூறப்படுகிறது.

ராசிபுரம் நகர திமுக செயலாளராக உள்ள என்.ஆர்.சங்கரின் மனைவி முனைவர் ஆர்.கவிதா சங்கர் நகர்மன்றத் தலைவராக உள்ளார். நகரில் உள்ள 27 வார்டுகளில் திமுக பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ளது. அதிமுக உறுப்பினர்கள் இருவர், விசிக உறுப்பினர், காங்கிரஸ் உறுப்பினர், சுயேட்சை உறுப்பினர் என தலா ஒருவர் உள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக மேலாக சுமூகமாக சென்ற நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும், பஸ் நிலையம் மாற்றும் தீர்மானத்திற்கு பிறகு நகர்மன்றத் தலைவர், நகர திமுக செயலாளருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் தீவிரம் காட்டிவருகின்றனர். இதற்கு காரணம் பேருந்து நிலையம் மாற்றத்தில் சிலர் மட்டும் தனிப்பட்ட ஆதாயம் பெற்றுள்ளதாக கூறப்படுவதே ஆகும். இதனை தொடர்ந்து இவர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் அதிகரித்து உள்ள நிலையில், அவர்கள் சார்ந்த கட்சியின் மாவட்ட நிர்வாகியும் அழைத்துப் பேசி சரிசெய்து அனுப்பினார்.

இருப்பினும் சில தினங்களுக்கு முன்பு நகர்மன்றத் தலைவர் அறை வளாகத்தில், சில நகர் மன்ற உறுப்பினர்கள் மட்டும் கூடி நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதாசங்கர், நகரச் செயலாளர் என்.ஆர்.சங்கர் ஆகியோரிடம் நகர்மன்ற கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக பேசியதாக தெரிகிறது. அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள், நகர திமுக செயலாளருக்கும் இடையை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.ஒருவருக்கொருவர் தாக்கவும் முயற்சி நடந்ததுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்து நகர்மன்ற உறுப்பினர் கலைமணி என்பவர் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இதில் நகர்மன்ற உறுப்பினர் நகர செயலாளரால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.

வந்தார்கள் – சென்றார்கள்:

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் 12 பேர் நுழைவு வாயிலில் அமர்ந்து நகர்மன்ற நடவடிக்கைகளில் நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் தலையிடுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சில தினங்களுக்கு முன்பு நகராட்சியில் மயங்கி விழுந்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகர்மன்ற உறுப்பினர் கலைமணியும், திமுக பெண்கள் நகர்மன்ற உறுப்பினர்களும் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் இவர்கள் நகர்மன்ற கூட்டத்தில் நகர திமுக செயலாளர் தலைமையிடுவதாகவும், பேருந்து நிலையம் மாற்றம் தொடர்பாகவும், ஊடகத்துக்கு பேட்டியளித்து விட்டு அனைத்து உறுப்பினர்களும் வந்த வழியில் முடிவு எதுவுமின்றி அவர்களாகவே கலைந்து சென்றனர். மொத்தத்தில் இனிவரும் நகர்மன்ற கூட்டம் பரபரப்பாக இருக்குமா அல்லது எதாவது செட்டில் ஆகுமா என போகப்போகத்தான தெரியும். ஏற்கனவே நகராட்சி அலுவலகத்தில் மக்கள் அளிக்கும் விண்ணப்பத்தின் மீது எந்த பணிகளும் விரைந்து நடப்பதில்லை. நிரந்தர அதிகாரிகள் யாரும் நகரட்சியின் பல சீட்டுகளில் இல்லாதததால் பெரும் காலதாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு மக்களிடம் உள்ளது. பல விண்ணப்பங்கள் பலமாதம் கிடப்பிலும் உள்ளது. இந்நிலையில், இது போன்ற நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்களுக்குள் உள்ள பிரச்சனையில் நகராட்சிக்கு வரும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என எதிர்பார்ப்பு அனைவரிடம் உள்ளது. மொத்தத்தில் நகராட்சியில் பணிகள் நடப்பதிலும், மக்களுக்கான வேலை நடப்பதிலும் தடைகள் ஏதுமின்றி மக்களுக்கு விரைந்து பணிகள் நடக்க வேண்டும் என்பது அனைவரும் விருப்பம். இது நகர்மன்ற தலைவர், உறுப்பினர்களின் கூட்டு நடவடிக்கையில் தான் உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!