Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்நாமக்கல் மருத்துவமனை விவகாரம்: தவறான தகவல் பரப்புவோருக்கு ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல் மருத்துவமனை விவகாரம்: தவறான தகவல் பரப்புவோருக்கு ஆட்சியர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டம் பொதுமக்களின் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு காவல்துறையினர் மூலம் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.உமா.,எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் பொழுது அந்த மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி, மேலும் கூடுதல் படுக்கைகள் மற்றும் உயிர் காக்கும் உயரிய சிகிச்சைகள், சிறப்பு சிகிச்சைகள், விபத்து அவசர சிகிச்சைகள் முதலான அனைத்து சிகிச்சைகளையும் ஒருங்கிணைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது நிறுவப்படும். அதனைத்தொடர்ந்து மாவட்ட தலைமை மருத்துவமனை என்ற நிலை அருகிலுள்ள தாலூகா மருத்துவமனைக்கு வழங்கப்பெற்று அம்மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 700 படுக்கை வசதிகளுடன் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டடத்தினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்புதிய வளாகத்தில் 700 படுக்கை வசதிகளுடன் விபத்து அவசர சிகிச்சை, 24 மணி நேர பிரசவப்பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, இருதய சிகிச்சை (மாரடைப்பு) தீவிர சிகிச்சை பிரிவு, விஷமுறிவு மற்றும் பாம்புக்கடி தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

மேலும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு டிசம்பர் 2023 ஆம் மாதம் முதல் முழு அளவில் செயல்பட்டு வருகிறது. இடம் மாற்றம் செய்த பிறகு கடந்த 8 மாதங்களில் உள் நோயாளிகள் எண்ணிக்கை 15,000 நபர்களாக உயர்ந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட உயர் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழைய மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 4 அறுவை சிகிச்சை அரங்குகள் இருந்த நிலையில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை 12 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்பட்டு வருகின்றது. மேலும், புதிய மருத்துவமனையில் இரைப்பை குடல், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், மூளைசாவு அடைந்த நன்கொடையாளர்களிடம் உறுப்புகள் பெறப்பட்டு 3 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு 50 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இதர வட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் இராசிபுரத்தில் ரூ.54.00 கோடி மதிப்பில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும் மற்றும் திருச்செங்கோடு வட்டத்தில் ரூ.23.00 கோடி மதிப்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தியும், பரமத்தி வேலூரில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவமனை மேம்படுத்தும் பணி என அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து நோயாளிகள் நலன்பெறும் வகையில் கட்டடப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், நாமக்கல் வட்டத்தை பொருத்தவரையில் 3 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 நலவாழ்வு மையங்கள் (Health Wellness Center) ஆகியவை நாமக்கல் நகரினை மையமாக கொண்டு பொதுமக்களுக்கு சிறுநோய் மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 28 எண்ணிக்கையில் 108 வாகனங்கள் 24 மணி நேரமும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கென செயல்பட்டு வருகின்றது. இவ்வாகனங்கள் அதிக விபத்துக்குள்ளாகும் இடங்கள் (Hotspot) தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதி மக்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்திற்குள்ளாகும் நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டமான இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் விபத்து நடைபெற்ற 48 மணி நேரத்திற்குள் ரூ.1.00 இலட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கிடும் வகையில் 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 12 தனியார் மருத்துவமனைகள் என மொத்தமாக 19 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 4,272 பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாமக்கல் நகரை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறு நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கிடும் வகையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையில் 29.7.2024 அன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவமனை ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, நாமக்கல் நகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை, இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 சேவை ஆகியவை சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிறப்பான முறையில் மருத்துவ வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு காவல்துறையினர் மூலம் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!