ராசிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க வேண்டும் என ராசிபுரம் நகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை பேருந்து நிலைய மீட்புக்குழு சார்பில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்த நிலையில், பேருந்து நிலையம் மாற்றும் நகர்மன்றத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு என்ற அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது.
ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் தற்போதைய பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க நகர்மன்றத்தால் ஜூலை.5-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணைப்பாளையம் பகுதியில் தனியாரிடம் நகராட்சியால் தானமாக பெறப்பட்ட 7 ஏக்கர் நிலம் உள்ள பகுதியில் பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனிடையை நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றியமைக்க நகரில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு சார்பில் ஜூலை.18-ல் கடையடைப்பு போராட்டமும், மக்கள் நலக்குழு சார்பில் ஜூலை.20-ல் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதனிடையே ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழு என்ற அமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்காணோர் திரண்டு வந்து நகர போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜூலை.23-ல் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேருந்து நிலைய மீட்புக்குழுவினர் பேருந்து நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கையில் மனுக்களுடன் பேரணியாக வந்த நகராட்சி அலுவலகத்தில் பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றம் செய்யக்கூடாது என மனு அளித்தனர். இதே போல், ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழுவினர் பேருந்து நிலையம் முன்பாக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அதனை மாற்றியமைக்க ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இது போல் பேருந்து நிலையம் மாற்றியமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து போராட்டம் நடத்திவருவது பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதுவானால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு ஆய்வு செய்து, அரசும், மாவட்ட நிர்வாகமும் மக்களின் கருத்துக்களை கேட்டு பேருந்து நிலைய இடம் தேர்வு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பது பலரது கருத்தாகவுள்ளது.