ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை தொடர்ந்து அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆடி மாதம் முழுவதும் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர். ஆடி 2-ம்ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு 50 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக ஏராளமான பெண் பக்தர்கள் வளையல் கோர்க்கும் நிகழ்ச்சிகள் பங்கேற்று பக்தியுடன் வளையல்களை கோர்த்தனர். இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர்.