நாமக்கல் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை துறை சார்பில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நாமக்கல் தொழிலாளர் ஆய்வாளர் சங்கர் தலைமை வகித்து, சட்ட திருத்தங்கள் குறித்தும், வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பேசினார். புதிய சட்ட திருத்தத்தின்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் வணிக நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பதிவுச் சான்று பெறுதல், பெயர் பலகையை தமிழில் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் பணியாளர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஓய்வறை, உணவு அருந்தும் அறை, முதலுதவி பெட்டி போன்ற வசதிகள் ஏற்படுத்தி தருதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார். இது போன்ற சட்ட திருத்தங்களை தவறாமல் கடைபிடித்து ஒத்துழைக்குமாறு நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து வணிகர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தமிழில் பெயர்பலகை அமைக்க தமிழக அரசு வணிகர்களுக்கு கால அவகாசம் வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், புதிய சட்ட திருத்தங்கள் பற்றி அனைத்து வணிகர்களுக்கும் சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் பேரமைப்பு நிர்வாகிகள், நாமக்கல் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வணிகர்கள், வணிக நிறுவன மேலாளர்கள் கலந்துகொண்டனர்.