ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் காந்தி கல்வி நிலைய உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியர் டாக்டர் ச.உமா தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக காமராஜர் 122-வது பிறந்த தினவிழா மற்றும் கல்வி வளர்ச்சி நாளை தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாமக்கல் ஆட்சியர் ச.உமா , வெண்ணந்தூர் ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி உள்ளிட்ட பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பார்மசி கல்லூரியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த தினவிழாவில், கல்லூரியின் தலைவர் க.சிதம்பரம் தலைமை வகித்து படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். காமராஜர் வாழக்கை முறைகள், வரலாறு, சாதனைகள், பொதுவாழ்க்கை குறித்துப் பேசினார். கல்லூரியின் முதல்வர் ப.அசோக்குமார் முன்னிலை வகித்தார். பின்னர், காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் மா ணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.

இதே போல் ஆண்டகளூர்கேட் அருள்மிகு வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் ரெ.உமாதேவி தலைமை வகித்தார். இதில் காமராஜர் குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாநில அளவிலான கையெழுத்துப் போட்டி, ஓவியப்போட்டி எஸ்ஆர்வி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்கம் முன்னாள் தலைவர் எம்.ராகவன் , பள்ளி முதல்வர்
ஆர்த்தி, மணியம்மா மருத்துவமனை டாக்டர் லோகேஸ்வரன் மற்றும் சித்திரம் பவுன்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ், கார்த்தி ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.