தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ. மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. + 2 முடித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வரும் புதன்கிழமை அன்று வகுப்புகள் தொடங்கவும், அதற்கு முன்பு மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி மற்றும் வழிகாட்டும் பயிற்சி நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,
கல்லூரி கல்வி இயக்குனர் செ.கார்மேகம் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்க்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் வழிகாட்டும் பயிற்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் வழிகாட்டும் பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ராஜா வழிகாட்டுதலின்படி கம்ப்யூட்டர் பேராசிரியர்கள் பொருளியல் துறை மா.குமாரவேலு, புள்ளியியல் துறை சா.சுஜாதா, புவியியல் துறை பெ.தங்கவேலு ஆகியோர் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு அனைத்து துறை மாணவிகளுக்கான பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக எஸ்.ருகையா பேகம் கலந்து கொண்டு இளைஞர் நீதிச் சட்டம், போக்சோ சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
அதேபோல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரும், சேலம் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியருமான எஸ்.கலைச்செல்வன், சேலம் அரசு கலைக் கல்லூரி உள் தர உறுதி மையம் பேராசிரியர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.விஜயகுமார், நாமக்கல் சமூக நலத்துறை மூத்த ஆலோசகர் ஞா.பேபி பிரிஸ்கில்லா கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களின் பங்கும் மனநிலையும் என்ற தலைப்பிலும் பிசியோதெரபிஸ்ட் டாக்டர் பி ஜெயந்தி மன நலமும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பிலும் பிசியோதெரபிஸ்ட் எஸ்.அர்ச்சனா குமரப் பருவ வாழ்க்கை முறைகளை கையாள்வது என்ற தலைப்பிலும் விளக்கம் அளித்து பேசினர். பயிற்சி முகாமில் அனைத்து துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.