நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து பல்வேறு சங்கத்தினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் (5.07.2024) நடந்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினாலும், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காரணத்தினாலும், பேருந்து நிலையம் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கடந்த செவ்வாய்க்கிழமை நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து பஸ் உரிமையாளர்கள் சங்கம், வர்த்தகர்கள் சங்கம், ஜவுளி கடை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், மக்கள் நலக்குழு, நகர் வளர்ச்சி மன்றம், நகை கடை உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்பினரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. நகர்மன்ற கூட்ட அரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் வட்டாட்சியர், சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர் து.நித்யா, ராசிபுரம் காவல் ஆய்வாளர் கே.செல்வராஜ், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும் ராசிபுரம் நகரில் உள்ள வணிகர் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், துணிக்கடை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம் பல்வேறு துறை சார்ந்த சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.ஆர்.பரந்தாமன் பேசுகையில், புதிய பேருந்து நிலையம் அமைவது வரவேற்கத்தக்கது தான் ஆனால் சேலம் சாலை, கடைவீதி, நாமக்கல் சாலை,கோனேரிப்பட்டி சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணி செய்ய வேண்டும் எனவும் அதேபோல தற்போது நடைமுறையில் உள்ள பேருந்து நிலையத்தை நகர பேருந்து நிலையமாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு பேசுகையில், பேருந்து நிலையம் மாற்றம் அவசியமானது தான், தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேருந்து நிலையம் அமைவது வரவேற்கத்தக்கது என்றார்.இதே போல் மக்கள் நலக்குழு செயலாளர் நல்வினை செல்வன் பேசுகையில், ராசிபுரம் தற்போதைய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாகவும், புதியதாக உருவாக்கப்படும் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையமாக அனைத்து வசதிகளுடன் நெடுஞ்சாலையையொட்டி அமைக்கப்பட வேண்டும் . இதே போல் ராசிபுரம் நகரைச் சுற்றியுள்ள கிராமப்புற அனைத்துதரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்பது அவசியம் என்றார்.
ராசி கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி பேசுகையில், ராசிபுரம் நகரம் மிக குருகிய சாலைகள் கொண்டது, கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் அதன் வாகனங்கள் போக்குவரத்தும் அதிகம். இதனால் தற்போதைய பஸ் நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றி, புதிய பஸ் நிலையத்தை தேசிய நெடுஞ்சாலை நோக்கி கொண்டு சென்றால், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நகர எல்லையும் விரிவாக்கம் செய்ய முடியும்.எதுவும் ஆரம்பத்தில் சிரமமாகத்தான் இருக்கும் நாளடைவில் இது சீராகும் என்றார்.
இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பேசுகையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அனைத்து மக்களிடம் குறை கேட்கப்படும் . தற்போது முதற்கட்டமாக வியாபாரி சங்க நிர்வாகிகள், சேவை அமைப்பினருடன் கருத்துக் கேட்கும் கூட்டமானது நடைபெற்றுள்ளது.பேருந்து நிலையம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் முதல் 10 ஏக்கர் நிலம் வரை தேவைப்படுகிறது. தற்போது ராசிபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் போதிய அரசு நிலம் இல்லாத காரணத்தினால், நகராட்சிக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. நகரயொட்டியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் அல்லது யாரேனும் பட்டா நிலங்களை அரசுக்கு வழங்க முன் வந்தால், பேருந்து நிலையம் அப்பகுதியில் அமைப்பது குறித்தும் பரிசீலக்கப்படும் என்றார். முன்னதாக இக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்பினர்களும் பங்கேற்றனர்.