நாமக்கல்: மாணவ மாணவியர்கள் ஆதார் அட்டையில் கைரேகை பதிவு அவசியம் என கூறப்பட்டுள்ளதால் பல்வேறு மையங்களில் பள்ளி மாணவ மாணவியர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் வகுப்புகளை புறகணித்து ஆதார் மையங்கள் முன்பாக பல மாணவ மாணவியர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று கைரேகை பதிவு செய்ய நிலை உள்ளதால் பலரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தபால் அலுவலக தேமிப்பு கணக்கு துவங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவ மாணவியர்கள் ஆதார் அட்டையில் கைரேகை பதிவு செய்தவதை ஆதார் மையங்களில் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தோறும் கைரேகை பதிவு, போட்டோ மாற்றுதல், பெற்றோர் பான்கார்டு இணைப்பு போன்றவற்றிற்கு சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடுகள் செய்திருந்தாலும், வட்டாரத்துக்கு ஒருவரை மட்டும் நியமித்து இப்பணியினை மேற்கொண்டு வருதவால், இது அனைத்து பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கும் போதுமானதாக இல்லை.
வட்டாரம் தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாமின் பணியாளரால் இதனை விரைந்து முடிக்க முடியவில்லை. இதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் இப்பணியை மேற்கொள்ள வெளியில் உள்ள ஆதார் மையங்களை நாடி வருகின்றனர். குறிப்பாக ராசிபுரம் நகராட்சி அருகில் உள்ள ஆதார் பதிவு மையம், தபால் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் பதிவு மையம் உள்ளிட்ட தனியார்கள் நடத்திவரும் ஆதார் மையங்கலில் அதிக கூட்டம் காணப்படுகிறது. இதில் பள்ளி மாணவ மாணவ மாணவியர்கள் பலரும் வகுப்புகளை புறகணித்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளியின் மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளிகள் தோறும் கூடுதல் பணியாளர்களை நியமித்து சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.