நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி அருகே உள்ள கள்ளுக்காடு கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் மகன் பி ஆர் முகிலன் (41). இவர் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள HDFC தனியார் வங்கி கடந்த 2017 -ம் ஆண்டு ரூ23 லட்சத்தை கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி உள்ளார்.
59 மாதங்களுக்கு ரூ 48,400/- வீதம் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி 16 மாதங்கள் மாதாந்திர தவணை தொகைகளை வங்கியில் செலுத்திய நிலையில் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் லாரியை வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து கைப்பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. சொந்த பணம் ரூபாய் 12 லட்சத்தையும் கடன் பெற்ற பணம் ரூபாய் 23 லட்சத்தையும் செலுத்தி ரூ 35 லட்சத்தில் லாரியை வாங்கிய நிலையில் கடந்த 2021 ஜூன் மாதத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் 13,65,000/-க்கு லாரியை வங்கி விற்று விட்டு, லாரியை விற்ற பணம் போக இன்னும் ரூ 11,39,786/- வங்கிக்கு செலுத்துமாறு வங்கி முகிலனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து முகிலன் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில் மாதாந்திர தவணைத் தொகைகளை சரிவர செலுத்தாததால் லாரியை ஒப்பந்தப்படி கைப்பற்றினோம் என்றும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி லாரியை விற்பனை செய்தோம் என்றும் தங்கள் தரப்பில் எவ்வித சேவை குறைபாடும் இல்லை என்றும் வங்கியின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வங்கியின் வாதத்தை நிராகரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் ஜூலை.2-ல் வழங்கிய தீர்ப்பில் விசாரணையில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
குறைந்த விலையில் லாரியை ஏலத்தில் விற்பனை செய்ததற்கு ரூ 6,75,000/- இழப்பீடாகவும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ 4,54,786/- இழப்பீடாகவும், நீதிமன்ற வழக்குசெலவிற்கு ரூ.10000 என மொத்தம் ரூ 11,39,786/- நான்கு வார காலத்திற்குள் லாரி உரிமையாளரான வங்கி வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையிலிருந்து வங்கிக்கு வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து கொண்டு, வாடிக்கையாளர் வங்கிக்கு எவ்வித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்று சான்றிதழை வழங்குமாறும் நுகர்வோர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.