Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் குளறுபடி

ராசிபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் குளறுபடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் முறையாக வழங்கப்படாமல் இழுத்தப்படிப்பதால், தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் கூறுகின்றனர். இதனால் குப்பை சேகரிப்பு நிலையம் முன்பாக பணியை புறகணித்துப் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை நகராட்சியின் சுகாதார அலுவலர் சமரசப்படுத்தி பணிக்கு அனுப்பி வைத்தார்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள நகராட்சி சார்பில் 69 பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 93 பணியாளர்கள் என 162 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ராசிபுரம் நகராட்சி பகுதியில் ஒப்பந்த பணியாளர்கள் நியமித்து துப்புரவு பணிகள் மேற்கொண்டு குப்பைகளை சேகரம் செய்ய துறையூர் எஸ்ஆர் எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் ராசிபுரம் மட்டுமின்றி தமிழகத்தில் சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நாமக்கல், காங்கேயம்,தஞ்சாவூர் போன்ற நகராட்சிகளிலும் குப்பைகளை சேகரிக்க ஒப்பந்தம் எடுத்துள்ளது.

இவர்கள் ராசிபுரம் நகரின் 27 வார்டுகளிலும் 93 பணியாளர்களை கொண்டு வீடுகள், கடைகள் தோறும் குப்பைகள் சேகரம் செய்து குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரிக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் நகராட்சியின் 27 பேட்டரி ஆட்டோ, 7 டாடா ஏஸ் ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரித்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்நிலையில், ஒப்பந்ததாரர் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் ரூ.500 கூலி என்ற அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிட்டு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் தொழிலாளர் வைப்பு நிதி பிடித்தம், சேமநல நிதி போக ரூ.390 மட்டும் கணக்கிட்டு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தொழிலாளர்களுக்கான பிஎப்., நிதியும் முறையாக அரசுக்கு செலுத்தவதில்லையாம். மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் முறையாக 5-ம் தேதிக்குள் வழங்கலாமல் 20-ம் தேதிக்கு மேல் வழங்கப்படுவதாகவும் துப்புரவுத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது துப்புரவு தொழிலாளர்களுக்கு மே மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக்குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் நகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமலும், கையுறை போன்ற பாதுகாப்பு கவச உடைகள் கூட வழங்கபடாமல் இருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை நகராட்சியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்றும் கூறுகின்றனர். இதனால் புதன்கிழமை குப்பை கிடங்கு முன்பாக வேலைக்கு செல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியை புறகணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒப்பந்த நிறுவனத்துடன் பேசி முறையாக சம்பளம் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜூடம் கேட்டபோது, முறையாக ஒப்பந்ததாரருக்கு உரிய தொகை கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் தான் சம்பளம் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், வாகனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களையும் ஒப்பந்ததாரர் தான் பராமரித்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு கவசங்களும் அவர்களுக்கு தரவேண்டும். இதற்காக நகராட்சி நாள்தோறும் ஒரு டன் குப்பை சேகரம் செய்ய ஒப்பந்ததாரருக்கு ரூ.4708 தருகிறது. நகரில் நாள்தோறும் 17 டன் குப்பை சேகரம் செய்யப்படுகிறது. இதற்கான தொகை மாதந்தோறும் ஒப்பந்ததாரருக்கு கணக்கிட்டு வழங்கப்பட்டுவருகிறது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம்பளம், வாகனப் பராமரிப்பு, கவச உடை கருவிகள் வழங்குவது அவர்கள் பொறுப்பு. ஆனால் இவை ஒழுங்காக தருவதில்லை என்ற தொழிலாளர்கள் புகார் குறித்து ஒப்பந்ததாரிடம் விளக்கம் கேட்க நேரில் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

மேலும் இது குறித்து எஸ்ஆர் எண்டன்பிரைசஸ் நிறுவன மேலாளர் கோபியிடம் கேட்டபோது, அனைத்து மாதங்களுக்கும் முறையாக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.தற்போது நடப்பு மாதத்தில் நகராட்சி எங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை கொடுக்காததாலும், வங்கி நடைமுறையில் சிக்கல் இருந்ததாலும் 22 தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பளம் காலதாமதம் ஆனது. இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். விரைவில் முழுமையாக சம்பளம் பிரச்சனை சரி செய்யப்படும் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!