ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பள்ளி மாணவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் உரிமம் பெற தகுயில்லாத நிலையில் இருசக்கர வாகனங்கள் இயக்குவதாக புகார்கள் உள்ளது. மேலும் இளைஞர்கள் பலர் வாகனங்களில் அதி வேகமாகவும், மூவர், நால்வர் இருசக்கர வாகனங்களில் செல்வதும் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பரமத்திவேலூர் பகுதியில் 14 வயது சிறுவர்கள் இருவர் ஆம்னி வேன் ஒட்டிச்சென்று இயக்கிய நிலையில், விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் வாகனசோதனை நடத்தப்பட்டது. ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் டி.நித்யா வாகன சோதனை நடத்தினார். ராசிபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பள்ளி மாணவர்கள் இயக்கிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற சிறுவர்கள் வாகனங்கள் இயக்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்தார்.