“காலத்தி னால்செய்த நன்றி சிறுதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க.. ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த இளைஞர்
நாமக்கல் மாவட்டம், பொம்மகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகே, நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 17.5.2024 அன்று சாலை விபத்தில் காயமடைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி மகன் சதீஷ் (38) தற்சமயம் பூரண குணமடைந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்திந்து நன்றி தெரிவித்து கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கடந்த 17.5.2024 அன்று ராசிபுரம் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள செல்லும் வழியில், பொம்மகுட்டைமேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகே, நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி என்பவர் மகன் சதீஷ் சாலை விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவரை உடனடியாக மீட்டு மாவட்ட ஆட்சித்தலைவருடன் வந்த மற்றொரு அரசு அலுவலக வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.
ஆட்சியர் ச.உமா அறிவுறுத்தலின்படி உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சதீஸ்க்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு 8 நாட்கள் பொது பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது பூர்ண குணமடைந்துள்ளார். விபத்தின் போது காப்பாற்றி அரசு வாகனத்தில் சிசிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதற்காக ஆட்சியரை நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இது குறித்து விபத்தில் காயமடைந்து தற்போது குணமடைந்துள்ள சதீஷ் தெரிவிக்கையில், மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய காலத்தில் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக என்னால் பூரண நலம் பெற முடிந்தது. விபத்து ஏற்பட்ட உடன் குறுகிய காலத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இன்று நான் உயிர் பிழைத்தற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல் மிகவும் நன்றிக்கு உரியதாகும். எதிர்காலத்தில் எதிர்பாதார விதமாக சாலை விபத்து ஏற்படும் சமயத்தில் நான் விபத்திற்கு உள்ளானவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கண்டிப்பாக தேவையான உதவிகள், முதலுதவிகள் மேற்கொள்வேன் என்றார்.
மேலும், விபத்துகளை தடுப்பது குறித்து என்னால் இயன்ற விழிப்புணர்வு பணிகளை கட்டாயம் மேற்கொள்வேன். விபத்தில் இருந்து என்னை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து வித்துக்கள் ஏற்பாடாத வகையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன் உட்பட அலுவலர்கள் பலர் இருந்தனர். விபத்தில் காயமடைந்த திரு.சதீஷ் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலம் பெற்று வீடு திரும்பிய சதீஸ் ஆட்சியரை அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளதை பார்க்கும் நமது நாமக்கல் ஆட்சியரின் செயல், “பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலின் பெரிது”… என்பதை உணர்த்தியுள்ளது.