பெங்களூர் ஐ சி எஸ் இ.,- ல் பயின்று ஆராய்ச்சி மாணவர் ஆவது எனது லட்சியம்: குருசாமிபாளையம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 600-க்கு 597 மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ்.கோகுல் விருப்பம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் எஸ்.கோகுல் என்ற மாணவர் 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.
மாணவர் எஸ்.கோகுல் பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-98, ஆங்கிலம்-99, இயற்பியல்-100, வேதியியல்-100, உயிரியல்-100, கணிதம்-100. இப்பள்ளி மாணவி எஸ்.வி.வசந்தாஸ்ரீ 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் பெற்ற பாடவாரியான மதிப்பெண்கள்- தமிழ்-98, ஆங்கிலம்-97 இயற்பியல்-97, வேதியியல்-98, உயிரியல்-100, கணிதம்-99. பள்ளி மாணவர் சி.பிரகாஷ் 582 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது பாடவாரி மதிப்பெண்கள்: தமிழ்-97, ஆங்கிலம்-98, இயற்பியல்-96, வேதியியல்-97, கம்பூய்ட்டர்-100, கணிதம்-94. சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளியின் தலைவர் என்.வி.நாகேந்திரன், தாளாளர் வி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் வி.மனோகரன், பள்ளி முத்லவர் ஜி.மகேந்திரன், என்.செல்வம், ஆர்.யுவராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர். மேலும் கேக் வெட்டி கொண்டாடி நினைவு பரிசளித்தனர்.
தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த சிறு விவசாயி எஸ்.செல்வராஜூ-அன்னபூரணி தம்பதியின் மகனான எஸ்.கோகுல் இவரது தங்கை எஸ்.எஸ்.அருணா ஆகியோர் இதே பள்ளியின் ஆரம்பம் முதல் பயின்று வருகின்றனர். எஸ்.கோகுல் 600 -க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளது பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள், சக மாணவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து மாணவர் எஸ்.கோகுல் தெரிவிக்கையில், எனது அப்பா விவசாயம் தொழில் செய்து வருகிறார். குருசாமிபாளையம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன். எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஊக்கம் காரணமாக மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். படிப்பு நேரம் போக விடுமுறை நாட்களில் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தேன். பெங்களூர் ஐ சி எஸ் இ.,- ல் பயின்று ஆராய்ச்சி மாணவர் ஆவது எனது லட்சியம் என்றார். மேலும் அண்மையில் வெளியான ஜேஇஇ மெய்ன் தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் எஸ்எஸ்எல்சி தேர்வில் இவர் 500-க்கு 491 மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றார்.