ராசிபுரம் நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் ஏப். 19-ல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பில் காவல்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதனையொட்டி நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி ராசிபுரத்தில் நடைபெற்றது. பேரணியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த.முத்துராமலிங்கம் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம்,நாமக்கல் சாலை,சேலம் சாலை,கடைவீதி போன்ற முக்கிய சாலைகள் வழியாக சென்று இறுதியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. அணி வகுப்பில் காவல்துறையினர், ராணுவ படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்தியவாறு பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதின் நோக்கம் குறித்து ஊர்வலமாக சென்றனர். பேரணியில் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார்,வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.