நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கார் மரத்தின் மீது மோதியதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு –
கோவில் திருவிழாவிற்கு வந்த இளைஞர்களுக்கு நேர்ந்த சோக சம்பவம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த மேலும் ஒருவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
குமாரபாளையம் அருகேயுள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூரை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் காரில் சீராம்பாளையம் வந்தனர். இவர்கள் ஐந்து பேரும் குமாரபாளையம் -பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் திருவிழா நடைபெறும் சீராம்பாளயைம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார், கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தில் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற, திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேற்கொண்டு போலீஸார் இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.