நாமக்கல் தலைமையிடமாகக் கொண்டு முட்டை ஏற்றுமதி மண்டலம் அமைவது உறுதி : கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி.,
நாமக்கல்லை தலைமையிடமாகக்கொண்டு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுவது உறுதி என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., குறிப்பிட்டார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொ.ம.தே.க. வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் வெண்ணந்தூர் பகுதியில் கிராமந்தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் தமிழக வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், ஒன்றியத் திமுக செயலர் ஆர்.எம்.துரைசாமி உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள
கோழிப்பண்ணைகளில் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கோழிப்பண்ணைகளில் முட்டை சேகரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுடன் முட்டை சேகரத்து வழங்கும் பணியில் உதவிய வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் துண்டு பிரசுரங்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருப்பது கோழி முட்டை உற்பத்தி, கோழிப்பண்ணைத் தொழில். இதில் நாளொன்றுக்கு ரூ.7.50 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு முட்டை ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மாவட்டத்தில் முட்டை உற்பத்தி, கோழிப்பண்ணை சார்ந்த உபத் தொழில்களில் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசும் போது, கோழிகளை விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என பேசினேன். இதனையடுத்து மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சகம் இதனை பரிசீலிப்பதாக உறுதியளித்தனர். நாமக்கல்லில் கோழிகள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே கண்டிப்பாக நாமக்கல் பகுதி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும். இதனால் கோழிப்பண்ணையாளர்கள், இதனை சார்ந்த துணைத் தொழில் பிரிவோர், தொழிலாளர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.