நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை வாக்களிப்போர் 23,500 பேர் – ஆட்சியர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறை வாக்காளர்கள் சுமார் 23 ஆயிரத்து 500 பேர் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் அருகேயுள்ள பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில்,
மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் ச.உமா மேலும் தெரிவித்ததாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் மக்களவை பொதுத்தேர்தல் 2024 மார்ச்
16 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல்
நாளான ஏப்ரல் 19 -ல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி
செய்யும் வகையில் நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு
வருகிறது.
நாமக்கல் மக்களவை தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள்.
அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளது. நாமக்கல்
மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் 80 சதவிகிதம் வரை வாக்கு பதிவாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கல்வி அறிவில் மிகச்சிறப்பாக விளங்கும் மாவட்டம். எனவே,
இந்தியாவிலேயே அதிக வாக்கு பதிவு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம்
விளங்கிடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் நாளான 19.4.2024 அன்று தங்களது வாக்கு இடம் பெற்றுள்ள
வாக்குச்சாவடிக்கு காலை 7 மணிக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
அதோடுமட்டுமல்லாமல் தங்களது உறவினர், நண்பர்களையும் வாக்களிக்க
ஊக்குவிக்க வேண்டும். மக்களவை பொதுத்தேர்தல் 2024-ல் நாமக்கல் மாவட்டத்தில்
முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் ஏறத்தாழ 23,500 நபர்கள்
உள்ளனர். அனைவரும் தவறாமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5
ஆண்டுகளுக்கு நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் மக்கள் பிரதிநிதிகள்
தேர்ந்தெடுக்கும் உரிமை கடமை நம் அனைவருக்கும் உள்ளது. எனவே, வாக்குரிமை
படைத்த அனைவரும் தவறாமல் தனது வாக்கினை செலுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட
அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி
அமைக்கப்பட்டு முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவியர்களுக்கு வாக்கு
பதிவு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர்தல் நாள் 19.4.2024 அன்று முதல் தலைமுறை வாக்காளர்கள்
வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகளில்
எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்று மெகந்தியிட்டு விழிப்புணர்வு
ஏற்படுத்தினார்கள். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபன் (நாமக்கல்),
திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, பாவை கல்வி நிறுவனங்களின்
தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் உட்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ,
மாணவியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.