நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்- ஆட்சியர் தொடங்கி வைப்பு
ராசிபுரம்,ஏப்.1: நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வீடுகளுக்கே சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச.உமா ராசிபுரத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
ராசிபுரம் கட்டனாச்சம்பட்டி ஊராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு இல்லங்களுக்கு சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கி பணியினை அதிகாரிகளுடன் சென்று அவர் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 687 வாக்குபதிவு மையங்களில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 22.01.2024- தேதியின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 6,93,728 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 7,38,383, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 196 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 14,32,307 உள்ளனர்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு பணிகள் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பி வைத்தல் மற்றும் அலுவலர்களை நியமித்தல், அஞ்சல் வாக்கு சீட்டுகளை அனுப்பி வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1,628 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சம்மந்தப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படவுள்ளது. இப்பணிகள் 13.04.2024-க்குள் முடிக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வாக்குசாவடி நிலை அலுவலரின் கையொப்பத்துடன் வாக்காளர் அல்லது அவரது குடும்பத்திலுள்ள 18 வயது பூர்த்தியான உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
எனவே வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து வாக்காளர் தகவல் சீட்டினை பெற்றுக் கொண்டு தேர்தல் நாளான ‘ஏப்ரல் 19″ அன்று தவறாமல் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா தெரிவித்தார்.
தொடர்ந்து, ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.