நாமக்கல் தொகுதியில் நான் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் அண்ணா திமுக வேட்பாளர் சு.தமிழ்மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சு. தமிழ்மணி பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு பதிவினை செலுத்தினார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் அதிமுகவிற்கு ஆதரவான அலைவீசி வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. நாமக்கல் தொகுதியில் மட்டும் நான் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் காலை முதல் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. பகல் 12 மணி நிலவரப்படி சுமார் 36 சதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. தொகுதியில் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள், போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குப்பதிவு மையத்தில் வாக்கினை தவறாமல் செலுத்தினர். முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான டாக்டர் ச.உமா நாமக்கல் கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பள்ளிப்பாளையம் கோவிந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தனது வாக்கினை பதிவிட்டார்.
ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்குப்பதிவினை செலுத்தி நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம், கடந்த 1980-ம் ஆண்டு எம்ஜிஆருக்கு இருந்த ஒரு வரவேற்பு தற்போது மக்களிடம் நரேந்திரமோடிக்கு உள்ளது. இதனால் பாஜக பெரும்பான்மை தொகுதியில் வென்று ஆட்சியமைக்கும் எனக்கூறினார்.
இதே போல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், தனது சொந்த ஊரான கட்டனாச்சம்பட்டி கிராம சேவை மையத்தில் தனது வாக்குப் பதிவினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்து வருகின்றனர். திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெல்வது உறுதி என்றார்.
ராசிபுரம் பாரதிதாசன் சாலை தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாக்குசாவடியில் குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்த தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன். இந்திய குடிமகனின் முக்கிய கடமையான ஜனநாயக கடமையை செய்துள்ளேன். இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும், இந்தியா அனைவருக்குமானது என்பதனை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும். இந்தியா வெல்லட்டும் என்றார். இதே போல் பொட்டணம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மையத்தில் திமுக கூட்டணி கட்சியான கொ.ம.தே.க.வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் தனது வாக்கினை செலுத்தினார்.