சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கு 15 மாதங்களாகியும் இறுதிப் பட்டியல் வெளியாகவில்லை என்றும் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி V-A தேர்வு கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் நாள் நடைபெற்ற நிலையில், அதன்பின் 15 மாதங்களாகியும் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் தலைமைச் செயலக பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர்.
தலைமைச் செயலக உதவியாளர்/ உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும். 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு 2023 டிசம்பர் ஒன்றாம் நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடைபெற்றது. தேர்வாணையம் நினைத்திருந்தால் அடுத்த ஒரு வாரத்தில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலை வெளியிட்டு, அடுத்த சில வாரங்களில் கலந்தாய்வு நடத்தி முடித்திருக்க முடியும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 5 மாதங்களாகி விட்ட நிலையில் இன்னும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. இந்த தாமதத்தை நியாயப்படுத்த முடியாது. இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 658 பேரும் தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பிலும், மன உளைச்சலிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இனியும் காத்திருக்க வைக்கக் கூடாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தொகுதி V-A பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி , பணி நியமன ஆணைகளை வழங்க தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.